Saturday 31 December 2022

32. இன்று போய் நாளை வா



 ராவணன்,இந்திரஜித் ஆகியோர் மிகவும் குழப்பத்தில் இருந்தனர்.இறந்தவர்கள் எப்படி உயிர்பித்தார்கள் என்பது அவர்கள் குழப்பமாகும்.

ராவணன் மீண்டும் இந்திரஜித்தை போருக்கு செல்லுமாறு கூறினான்.இப்போது இந்திரஜித் மாய சீதை ஒன்றைக்கொண்டு வ்நது ராம் லட்சுமணன் முன் வெட்டி  சாய்த்தான் இதனை க்கண்ட  லட்சுமணன் மூர்ச்சை அடைந்தான்.விபீஷணன்,இந்த செயல் இந்திரஜித்தின் மாயச் செயல் என்று கூறி லட்சுமணனை தேற்றினார்.

இந்திரஜித் மாயம் போர் செய்தான்.இந்திரஜித் அரிய வரங்கள் பெற்றவன்.அவனைக் கொல்வது என்பது கடினம்.14 ஆண்டுகள் அன்ன ஆகாரம்.உறக்கம் இல்லா ஒருவனால் தான் மரணம் வந்தடையும் என்ற வரம் பெற்றவன்.

லட்சுமணன் ஒருவனே வனவாசம் மேற்கொண்ட நாள் முதல் அன்ன ஆகாரமும்,உறக்கமும் இல்லாமல் ராமனை  காத்து வந்தான்.எனவே இந்திரஜித் மரணம் லட்சுமணன் கையால் என்பதை உணர்ந்த ராமர்,இந்திரஜித்தை வெல்ல தான் மிகவும் களைப்பாக இருப்பதாகவும்,இந்திரஜித்துடன் போர் புரிய லட்சுமணனை பணித்தார்.

லட்சுமணனின் ஒரே பாணத்தால் இந்திரஜித் மாண்டான்.இந்திரஜித் மாண்ட செய்தி கேட்டு ராவணன் மிகவும் வருந்தினான்.

அடுத்து எதிரியை எதிர்க்க தானே கடும் கோபத்துடன் படை திரட்டி வந்தான்.இதுவரையில் காணாத பெரும்படையுடன் ராமனை எதிர்த்தான்.

ராமரும்,லட்சுமணனும் ராவணனை பல அஸ்திரங்களால் எதிர்த்தனர்.கர்தர்வ அஸ்திரத்தை  ராமர் பிரயோகித்தார்.இந்த அஸ்திரம் ராமனுக்கும் சிவபெருமானுக்கும் மட்டுமே தெரியும்.இந்த அஸ்திரத்தை ஏவியதின் விளைவாக எங்கு காணிலும் ராமரே தென்பட்டார்.இந்த அஸ்திரத்தின் மூலம் எண்ணற்ற வீரர்கள் கொல்லப்பட்டனர்.இலங்கை முழுவதும் ஒரே அழுகை ஓலமாக இருந்தது.

ராவணன் பற்பலஆயுதங்களையும்,அஸ்திரங்களையும் உபயோகித்தான்.அவற்றை ராமன் செயலிழக்க செய்தார்.ராவணன் தன்னந்தனியாய் ஆயுதமின்றி இருந்தான்.

நிராயுதபாணியான உன்னைக் கொல்ல மனமில்லை.’ இன்று போய் நாளை வா’என ராமன் கூற,ராவணன் அரண்மனை வந்தடைந்தான்.

Friday 30 December 2022

31.சஞ்சீவ பர்வதம்

 


இந்திரஜித் எதிரிகளின் படை மீது நாகாஸ்திரத்தை ஏவினான்.ராம,லட்சுமணர் மயக்கம் அடைந்தனர்.

இந்திரஜித் தன் தந்தை ராவணனிடம், ராம லட்சுமணர்களை கொன்றுவிட்டதாக மிக்க மகிழ்ச்சியுடன் வாத்தியங்கள் முழங்க சென்று வெற்றி செய்தியை தெரிவித்தான்.

சீதையை, ராட்சர்கள் புஷ்பக விமானத்தில் ஏற்றி வந்து ராம,லட்சுமணர் மூர்ச்சித்து வீழ்ந்துள்ளதையும்,வானரங்கள் இறந்துள்ளதையும் காண்பித்தனர்.மேலும் ராமன்,லட்சுமணர் இருவரும் இறந்து  விட்டதாக பொய் உரைத்தனர்.

சீதை தாங்கொண்ணா துயரம் அடைந்தாள்.துயரம் பலவாறு அவளை வாட்டியது.திரிசடை என்ற அரக்கி சீதையை தேற்றினாள்.இது ஒரு மாயத்தோற்றமே,விரைவில் ராமன் எழுந்து போரிட்டு உன்னை மீட்டு செல்வான் என ஆறுதல் கூறினாள்.

ராமனும் லட்சுமணனும் செயலற்று கரையில் கிடப்பதைப் பார்த்த சுக்ரீவன் பெரும் குழப்பத்துக்கு ஆளானான்.வானர் கூட்டத்தில் சேனன் என்ற தலை சிறந்த வைத்தியர் ஒருவர் இருந்தார்.

உடனடியாக ராமரையும்,லட்சுமணனையும் கிஷ்கிந்தைக்கு கொண்டு சென்றால் குணப்படுத்தமுடியும் என்றார்.இந்த நிலையில் ராமரையும்,லட்சுமணனையும் அவ்வளவு தூரம் கொண்டு செல்வது இயலாது என வேறு வழி பற்றி ஆலோசித்தார்.

கைலாயத்தின்மத்தியில் சுந்தரா என்ற மலை உள்ளது.அம்மலையில் உயிர்காக்கும் மூலிகையான சஞ்சீவிகரணி,வியல்யகரணி,சாவர்ணயகரணி,சந்தான கரணி போன்ற மூலிகைகள் உள்ளன.மாண்டு போனவர்களையும் உயிர் தர வல்லது.அவற்றை இந்த இரவில் அடையாளம் கண்டு எடுத்து வருவது கடினம்.எனவே அந்த மலையை அனுமன் அப்படியே தூக்கி வரவேண்டும் என்று கூற ,வடதிசை நோக்கி அனுமன் வால்நட்சத்திரம் போல் பாய்ந்தான்.

கைலாசத்துக்கு அருகில் இருந்த சிகரத்தின் மீது இறங்கினான்.மூலிகைகளைத்தேடநேரமில்லை.மலையை அப்படியே தூக்கிகொண்டு சூரிய உதயத்திற்குள் வந்துசேர்ந்தார்.மலையில் உள்ள மூலிகையின் வாசத்தால் அனைவரும் உயிர் பெற்றனர்.

அனுமன் மீண்டும் சஞ்சீவ பர்வதத்தை அதே இடத்தில் வைத்தான்.

Thursday 29 December 2022

29. அங்கதன் தூது.

 


தூதுவன் ஒருவனை அனுப்பி சீதையை விடுவிக்க சொல்லலாம்.ராவணன் மறுத்தால் போர் செய்யச் சொல்லலாம்’ என்று ராமன் கூறினான்.பின் தூதுவன் ஒருவனை அனுப்ப முடிவு  செய்யப்பட்டது

இம்முறை அங்கதனை தூது அனுப்ப முடிவு செய்தனர்.ஏனெனில் பகைவர்கள் தீது செய்தாலும் தீதின்றி மீண்டு வரக்கூடியவன் அங்கதன் மட்டுமே என்பதால்.

அங்கதனுக்கு அவன் கூறவேண்டிய செய்திகளை ராமன் எடுத்துரைத்தான்.

அங்கதன் இலங்கையை அடைந்து ராவணன் அரண்மணைக்கு சென்றான்.அங்கதனைப் பார்த்த ராவணன்’ நீ யார்?’  வந்த  காரியம் என்ன? என்றார்.மேலும் இங்குள்ள அரக்கர்கள் உன்னைக் கொன்று தின்பதற்குள் விவரங்ளைக்  கூறு’ என்றான்.

அங்கதன்,தான் ராமனின் தூதன் என்றும்,தன் பெயர் அங்கதன் என்றும் தான் வாலியின் மகன் என்றும் தன்னைப்பற்றிக் கூறினான்.

 பதிலுக்கு  ராவணன்’வாலி எனது  நண்பன்.நீ ராமரிடம் இல்லாமல் என்னுடன் வந்துவிடு.உன்னை நான் வானரங்களின் தலைவனாக்குகிறேன் என்றான்  அங்கதனிடம்.

ஆனால் அங்கதனோ..’சீதையை நீ விடுவித்தால் உன் தலை தப்பும்.இல்லையேல் நீயும் உன் குலமும் அழிவது உறுதி’ என்றான்.மேலும் உன் தம்பி விபீஷணன் ராமர் பக்கம் உள்ளான்.உனது தவற்றை உணர்ந்து சரண் அடைவதே மேல்,இல்லையேல் போர் நடப்பது உறுதி என்றான்.

அங்கதன் சொன்னதைக் கேட்ட ராவணன் கோபம் அடைந்தான்.’இவனை பிடியுங்கள்’ என்று ஆணையிட்டான்.தன்னை பிடிக்க வந்தவர்களை தூக்கிக் கொண்டு உயரே பறந்தான்  அங்கதன்.பின் அவர்களை கோபுர வாசல் அருகே போட்டு விட்டு தன்காலால் மிதித்து கொன்றான்.

உடன் அங்கிருந்து புறப்பட்டு ராமரிடம் சென்றான்.

28. சேது பந்தனம்

 



இலங்கைக்கு செல்ல வேண்டுமானால் கடலைத்தாண்டி செல்லவேண்டும்.வானர் சேனைகள யாவும் கடலில் அணை கட்டினால் தான் செல்ல முடியும்.

ராமன் கடலரசனை வேண்ட….கடலரசன் ராமன் முன் தோன்றினார்.கடல் மீது பாலம் கட்ட ராமன் அனுமதி கேட்டான்.வானர கூட்டத்தில் விஸ்வகர்மாவின் மகன் நளன் உள்ளான்.இவனது சக்தியால் கடலில் போடப்படும்  கற்கள் மிதக்கும்.எனவே அவன் ஆற்றல் மூலம் அணை கட்டுமாறு கடலரசன் கூறினான்.

(இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே உள்ள தூரம் 22 கிலோ மீட்டர்)

ராமனின் ஆணைப்படி நளன் பாலம் கட்டத் தொடங்கினான்.வானர வீரர்கள் உதவியுடன் பெரிய பெரிய பாறாங்கற்களையும்,மரங்களையும் வானர சேனை கொண்டு வர 5 நாட்களில் பாலம் கட்டி முடிக்கப்பட்டது.பின் வானரப்படையுடன் லட்சுமணனும் ராமனும் சென்றனர்.அனுமன் தோள் மீது இருவரும் அமர்ந்து சென்றதால் அனுமன்' சிறிய திருவடி ' என்று அழைக்கப்படுகிறான்.

வானர சேனைகளைப் பார்த்த மால்யவன் என்ற அரக்கன் ராமனிடம் சமாதானம் செய்துகொள்ளும்படி ராவணனிடம் கேட்டான்.ஆனால் அவன் கேட்க வில்லை.இலங்கையின் நான்கு எல்லைகளிலும் காவல் தலைவர்களை நியமித்தான்.

தன் காவலைத் தாண்டி  யாரும் உள்ளே வரமுடியாது என்ற இறுமாப்புடன் இருந்தான்.

ராமன் அன்றிரவு சுவேல மலையில் தங்கி இலங்கை நகரைக் கண்டு ரசித்தான்.ராவணனின் தகாத செயலால் இலங்கை அழியப்போவது நினைத்து வருந்தினான்.சுக்ரீவன் வானில் தாவிச் சென்று அரண்மனையின் கோபுர வாசலை  அடைந்தான்.அங்கே இருந்த ராவணன் மீது பாய்ந்து அவனை கீழே தள்ளினான்.யுத்தம் நடந்தது.ராவணன் உடனே மாயச்செயல்களில் இறங்கினான்.

இதனை அறிந்த சுக்ரீவன் மீண்டும் ராமன் இருப்பிடம் வந்தான்.இவ்வாறு திடீரென போரிடக்கூடாது என ராமன் சுக்ரீவனிடம் கூறினான்.

பின்னர் ராமனின் ஆணைப்படி இலங்கையை வானர சேனைகள் சூழ்ந்துகொண்டது.

27. விபீஷண சரணாகதி


 


ராமன் இந்தியாவின் தென்கோடியில் ராமேஸ்வரத்தில் தங்கியிருந்தான்.விபீஷணன் ராமனை சந்தித்து அடைக்கலம் அ டைய புறப்பட்டான்.

ராமனைக் கண்டதும் பணிந்து நின்றான்.வானரத் தலைவர்களைப் பார்த்து ‘ இவன் யார்.நம்மால் ஏற்றுக்கொள்வதற்கு ஏற்றவனா’ எனக் கேட்டான் ராமன்.

சுக்ரீவன்,ஜாம்பவான்,நீலன் முதலியோர் அரக்கனும், ராவணனின் தம்பியுமாகிய விபீஷணனை ராமன் ஏற்றுக்கொள்வது குற்றமாகும் என்றனர்.

ராமன் அனுமனிடம்’அனுமனே, உன் கருத்து என்ன?’ என்றார்.

அனுமன்,’ இவன் நல்லவன்.இலங்கையில் ராவணன் என்னை பிடித்துக் கொல்லும்ப்டி உத்தரவிட்டான்.விபீஷணன் ஒருவனே எனக்கு தீங்கு செய்தால் ஆகாது என்றான்.அரக்க குலத்தில் பிறந்திருந்தாலும் நல்ல குணமுடையவன்.இவன் வரவை ஏற்றுக்கொள்ளலாம் என்றான்.

அனுமன் சொல்வதைக்கேட்ட ராமன் ‘அடைக்கலம் என வந்தவனை…அவன் யார் என்று பார்ப்பது நம் கொள்கையல்ல…’இவனுக்கு நாம் அடிக்கலம் தந்தோம்’ என்றார்.

சுக்ரீவன் உடன் விபீஷனிடம் சென்று அன்புடன் தழுவினான் ராமர் அவனுக்கு அடைக்கலம் தந்ததைக் கூறினார்.

‘சீதையை கடத்தி சென்றவனின் தம்பியாகிய என்னை ராமன் ஏற்றுக்கொள்வதா’ என வியப்புற்றான் விபீஷணன்.

விபீஷணன் ராமனின் பாதங்களில் விழுந்து வண்ங்கினான்.

ராமன் அவனிடம்’ என் பெயர் எதுவரை நிலைத்து நிற்குமோ அதுவரை இலங்கை செல்வம் முழுதும் உனக்கே அளிப்பேன் ‘ என்றார்.

பின் விபீஷணனோடு சகோதரர்களில் எழுவர் ஆனோம் என்றார்.

(இதற்கு முன் குகனை ஐந்தாவது சகோதரன் என்றும்,சுக்ரீவனை ஆறாவது சகோதரர் என்றும் கூறியுள்ளார்.)


யுத்த காண்டம் 26.ராவணனின் ஆலோசனை

 


அனுமன் சீதையை பார்த்துவிட்டு வந்ததால் சீதை இருக்குமிடம் தெரிந்தது.இப்போது அவர்கள் பிரச்சனை இலங்கைக்கு எப்படி செல்வது  என்பதே.

ராமன் சுக்ரீவனுடன் ஆலோசனை செய்தான்.அறிவும் ஆற்றலும் மிக்க பலர் நமது வானர சேனையில் உள்ளனர்.மிகப்பெரிய அளவில் வானர சேனையைக் கூட்டி நாம்  இலங்கை சென்று சீதையை மீட்டு வருவோம் என்று தீர்மாதித்தனர்.

ராமன் அனுமதி அளித்தான்.முழு ஊக்கத்தோடும் துடிப்புடனும் வானரபட்டாளம் முழுதும் தென் கடல் நோக்கி சென்றது.வழியில் காணப்படும் பட்டணங்களையோ,கிராமங்களையோ.மக்களையோ எந்த விதத்திலும் துன்புறுத்தக்கூடாது என்று வானர சேனைக்கு அறிவுறுத்தப்பட்டது.பூமியிலிருந்து வான்மூட்டம் அளவுக்குத் தூசி எழும்பும்படி வானர சேனை தென் திசை கடற்கரையை வந்தடைந்தனர்.

இலங்கையில் ராம தூதன் அனுமன் வந்து போனதும் அவனால் ஏற்பட்ட அழிவும்,இறந்து விட்ட வீரர்கள் பற்றியும் இனி வரக்கூடிய ஆபத்து பற்றியும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றதும் அனைவரும் ராவணனையும் அவனது ஆற்றலை பற்றியும் புகழ்ந்தனர்.மேலும் விரோதிகளை கொல்வது என முடிவு செய்தனர்.

ராவணன் தம்பி விபீஷணன் ‘ சீதையை ராமரிடம் ஒப்படைத்து விடுவதே நமது குலம் அழியாமல் இருக்க ஒரே வழி என்றார்.’

மேலும், இதனால் பின்னால் ஏற்படும் அழிவிலிருந்து இலங்கையை காப்பாற்றலாம் என்றார் விபீஷணன்.

விபீஷணன் மேல் கோபம் அடைந்த ராவணன்’ நீ என் தம்பி என்பதால் விடுகிறேன்.எதிரியைப் புகழும் நீ என் முன் நிற்காதே.’என கடுமையாகக் கூறினான்.

ராவணனின் கடுஞ்சொல் கேட்ட விபீஷணன் அவ்விடத்தை விட்டு வெளியேறினார்.

30. போர்

 



ராவணன் தன் மந்திரிகளிடம் ஆலோசனை நடத்தினான்.போர் நடப்பது உறுதியானது.இந்திரஜித்,கும்பகர்ணன் ஆகியோரிடம் ஆலோசனை கேட்கப்பட்டது.’ பராக்கிரமம் உள்ளவர்கள் நமது சேனையில் உள்ளனர்.அல்பமான மனிதர்களை பார்த்து பயந்து சீதையை விடுவிப்பது நமது வீரர்களுக்கு அழகு இல்லை.வருவதை எதிர்கொள்வோம்.எதிரியை எளிதில் வெற்றிக்கொள்வோம்’ என்றான் இந்திரஜித்.

கும்பகர்ணனோ…நம்மையே எதிர்க்க துணிந்தவர்கள் சாதாரண மனிதர்கள் அல்ல.சீதையை விடுவித்துவிட்டு சமாதானமாகப் போவதே மேல் ‘என்றான்.

பின் அவன் நீண்ட உறக்கம் கொள்பவன் ஆதலால் உறங்கப் போய் விட்டான்.

இந்திரஜித்துக்கு கும்பகர்ணன் சொல்வது பிடிக்காமல் ‘இத்தனை பயம் உள்ளவன் எங்கள் அரசு குடும்பத்தில் இருப்பது வேதனை.’ என்றான்.

பாம்புகளோடு வாழலாம்,பகைவர்களோடு வாழலாம் ஆனால் நயவஞ்சக சகோதரர்களோடு வாழ இயலாது’ என்றான் ராவணன்..

நகர முடியாத வகையில் இலங்கை பட்டினம் முழுவதும் வானரப் படைகள் சூழ்ந்து  இருந்தது.ராவணன் கோபாவசத்தோடு தன் மாளிகையின் மேல் தளத்திற்கு சென்று போய் பார்த்தான்.வானர சேனை முழுவதையும் கொன்று விடும்படி பெரிய சேனை ஒன்றை அனுப்பினான்.அவன் அனுப்பிய ராட்சச சேனை எதிரிகளை தாக்கியது.வானர சேனைகள் கைகளால் பெரிய பாறைகளையும்,மரங்களையும் பிடுங்கி எடுத்து தாக்கியதுஅரக்கர் பலர் மடிந்தனர்.சிலர் பாறைகளில் நசுங்கி மடிந்தனர்.

ராமன், தன் பாணங்களால் ஆயிரக்கணக்கான அசுரர்களை தாக்கி அழித்தார்.நாள் முழுவதும் போர் நடந்த்து.இறுபுறமும் பலர் மடிந்தனர்.சூரியன் மறைந்து இரவு வந்தது.அப்போதும் போர் நிற்கவில்லை.ஒருவருடன் ஒருவர் சண்டை போட்டனர்.

ஒருவ்ருக்கொருவர் முகம் பார்க்காமல் சண்டையிட்டார்கள்.

இலட்சுமணன் இந்திரஜித்தை எதிர்த்து போரிட்டான்.

Tuesday 27 December 2022

22. அசோக வனம்


 


மதிலால் சூழப்பட்ட ஒரு சோலையைப் பார்த்தான் அனுமன். ராம மந்திரத்தை உச்சரித்தபடியே சீதையை தேடினான்,

வசந்த காலமாதலால் செடிகொடிகள் பூத்து அழகாக காட்சி அளித்தது.அனுமன் மகிழ்ந்தான்.இங்கு சீதையைக் காண்போம் என அவன் உள்ளுணர்வு சொன்னது.

ஒரு மரத்தின் மீது அமர்ந்து பார்த்தான்.ஓரிடத்தில் அழகிய பெண் ஒருத்தி உடல் இளைத்து ஒரு மரத்தினடியில் அமர்ந்திருந்தாள்.அவளைச் சுற்றி அரக்கியர்கள் கூட்டம்.அதில் திரிசடை எனும் அரக்கியும் இருந்தாள்.அவள் மிகவும் நல்லவள்.சீதையிடம் மிகவும் பிரியம் உடையவளாக இருந்தாள்.சீதை ராமன் பிரிவால் அழுதுகொண்டிருக்க அவளை. சமாதானப்படுத்தினாள்.

அப்போது ராவணன் அங்கு வந்தான்.தன் விருப்பத்திற்கு பணியும்படி சீதையைக்கேட்டான்.

சீதை ராவணனைப்பார்த்து’ அயலார் மனைவியை அடைய நினைப்பது பாவம்.நீ உன் எண்ணத்தை மாற்றிக்கொள்.ராமனிடம் மன்னிப்புக்கேள்’ என்றாள். மேலும் ; இதனால் உன் குலம் விளங்கும்,ராமன் தன்னை சரணடைந்தவர்களை காப்பாற்றுவார்.’ என்று சொன்னாள்.

ராவணன் தன் கோபத்தை அடக்கிக்கொண்டு,அரக்கிகளிடம் ‘இவளை எப்படியாவது வழிக்கி கொண்டு வாருங்கள்’ என்று கூறிச்சென்றான்.

ராவணன் வந்து சென்றபின் சீதை பலவாறாக ராமனை எண்ணி வருந்தினாள்.தன் உயிரை விடுவதே மேல் என எண்ணினாள்.மரக்கொடிகளை ஒன்றிணைத்து சுருக்கு போட்டு உயிரை விட முடிவு செய்தாள்.இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த அனுமன்,இனியும் தாமதிக்ககூடாது என எண்ணினான்.

‘ராம..ராம..’ என ராமரின் பெயரைக் கூறிக்கொண்டு,சீதை முன்னால் வந்து கைகட்டி வணங்கி ‘தாயே..நீங்கள்தான் ராமனின் பத்தினி சீதாபிராட்டியா? என்றான்.

‘நான் தான் சீதை..நீ யார்? என்றாள்.;தாயே..தசரத சக்கரவர்த்தியார் மகன் ராமன் தங்களுக்கு செய்தி கூறி அனுப்பியுள்ளார்கள்.லட்சுமணனும் தன் வணக்கத்தை கூறியுள்ளார்.ராமரின் தூதன் நான்.அனுமன் என் பெயர்’ என்றான் அனும்ன்.

சுந்தர காண்டம்…21.இலங்கை மாநகரில் அனுமன்

 சுந்தர காண்டம் ராமாயணத்தில் மிகவும் சிறந்த பகுதியாகும்.பலர் தினமும் இக்காண்டத்தை மனப்பாடம் செய்வதுண்டு.அனுமன் சீதையைக் கண்டது அனுமனின் வீரதீர செயல்கள் இக்காண்டத்தில் கூறப்பட்டுள்ளது.

பேர் உருக்கொண்ட அனுமன்,மகேந்திர் மலையின் மீது நின்றான்.தெற்கு நோக்கினான்..இலங்கை தெரிந்தது.எப்படியும் இலங்கை சென்று சீதையைக்காண்பேன் என உறுதி பூண்டு தோள்களைத் தட்டி ஆரவாரம் செய்தான்.

பின், ராம நாமத்தைக் கூறிக்கொண்டு மகேந்திர மலையைத் தன் கால்களால் உதைத்து உயரே கிளம்பினான் வாயு மைந்தன்.அனுமன் ஆகாயத்தில் தாவுவதை காணும்போது பறப்பது போல இருந்தது.கடலைத் தாண்டி விடுவோம் என்ற உறுதி இருந்தது.

வழியில் பல சோதனைகள்.அவைகளை திறமையாக சமாளித்துக்கொண்டு கடலைத்தாண்டி இலங்கையில் காலடி வைத்தான்.தான் சேர வேண்டிய இடம் வந்துவிட்டதாலும்,தன் பெரிய உருவத்தைக் கண்டு ஏதேனும் ஆபத்து நிகழலாம் என எண்ணி தனது வடிவத்தை சுருக்கி சாதாரண வடிவத்தோடு மலை மீது வந்து நின்றான்.

இலங்கை நகரம் அழகாக இருந்தது.மலைகள்,சோலைகள்,ஆறுகள் முதலியவற்றைக் கண்டான்.அனுமனுக்கு இலங்கை தேவலோகம் போலக் காட்சி தந்தது.இவ்வளவு பெரிய நகரில் சீதையை நான் எங்கு தேடுவேன் என் திகைத்தான்.

குரங்கு வடிவம் எடுத்துக்கொண்டு இரவு வரை காத்திருந்தான்.இரவு வந்ததும் கோட்டை வாயில் நோக்கி சென்றான்கலசங்கள் பூண்ட  காவலாளிகள் பலர் காவல் காத்து நின்றனர்.ராம நாமத்தை சொல்லிக்கொண்டே பல இடங்களில்  சீதையைத் தேடினான்..

ராவணனின் அரண்மனைக்கு சென்றான்.அந்தபுரம் சென்றான்.அங்கு உறங்கிக் கொண்டிருந்தவர்களைக் கண்டான்.இராவணன் பத்து தலைகள் இருவது கரங்களுடன் உறங்குவதைப் பார்த்து அதிசியம் அடைந்தான்.அவனது மார்பில் விழுப்புண்களைக் கண்டு வீர மிக்கவன் ராவணன் என உணர்ந்தான்.

ராவணனின் அந்தபுரம் சென்றான்.அங்கு ராவணனின் மனைவி  மண்டோதரி உறங்கிக்கொண்டிருந்தாள்.ஒரு கணம் இவள் சீதையாக இருப்பாளோ? என நினைத்தான்.தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டான்.சீதை அந்தபுரத்தில் மஞ்சத்தில் படுத்திருப்பாளா? நிச்சயம் சீதை இல்லை என மனம் தெளிந்து சீதையை பல இடங்களில் தேடி அலைந்தான்.

Sunday 25 December 2022

19.சீதையை தேடும் பணி


 


ராமன் வாலியை மறைந்து நின்று தாக்கியதற்காக வருந்துவதாகவும்,இல்லாவிடில், உன் எதிரில் வ்ந்து போரிட யாராலும் முடியாது.நீ அப்படி வரம் பெற்றுள்ளாய்.எனவே அப்படி செய்தேன்.நீ உன் சகோதரனுக்கு செய்த கொடுமையாலேயே உனக்கு இப்படி ஒரு நிலைமை உண்டாயிற்று  என கூறினான்.

பின் வாலி ராமனிடம் அவர் கையால் மரணமெய்வது பாக்கியம் என்றான்.

தான் உயிர் துறப்பது உறுதி என்பதை அறிந்தான்.ராமனிடம் சுக்ரீவன் எந்த தப்பு செய்தாலும் மன்னித்துவிட வேண்டினான்.

வாலியின் உயிர் பிரிந்தது. வாலி மறைந்த செய்தி அறிந்த தாரை அங்கு வந்து அழுதாள்.அவளது மகன் அங்கதனும் அழுதான்.அனுமன் அவர்களுக்கு ஆறுதல் கூறினான்.அங்கதன் வாலிக்கு இறுதி சடங்குகளைச் செய்தான்.

சுக்ரீவன் முடிசூட்டிக்கொண்டான்.அங்கதனும் இளவரசு பட்டம் ஏற்றான்.

கார்காலம் ஆரம்பமானது.சுக்ரீவனும்,பரிவாரங்களும் கிஷ்கிந்தாவில் மகிழ்ச்சியுடன் காலங்கடத்தினர்.ராம லட்சுமணன் அருகில் இருந்த ஒரு குகையில் தங்கினர்.மழை விடாமல் பெய்தது.

சீதை நிலை குறித்து ராமன் வருந்தினான்.மழைகாலம் முடிந்தது.

ஒருநாள் சுக்ரீவன் அரச  காரியங்களை அமைச்சரிடம் ஒப்படைத்துவிட்டு மது மயக்கத்தில் இருந்தான்.மழைகாலம் முடிந்ததும் ராம காரியத்தில் ஈடுபடவேண்டும் என சிறிதும் நினைக்கவில்லை.

லட்சுமணன் தன் வில்லின் நாணை அசைத்தான்.வில்லிலிருந்து புறப்பட்ட ஓசை இடி இடித்தது போல கேட்டது.சுக்ரீவன் அது கேட்டு மயக்கம் தெளிந்தவனாய் ராமனின் பாதத்தில் வந்து பணிந்து…பிழையை மன்னிக்க வேண்டி..சீதையைத் தேடும் பணியில் உடனே ஈடுபடுவோம் என்றான்.

பின் தன் படை வீரர்களை ஒன்று திரட்டி சேனாதிபதிகளை நியமித்தான்.எட்டு திசைகளுக்கும் அவர்கள் சென்று சீதையைத் தேடும்படி கூறினான்.

‘ராமா… என்பெரிய சேனை  உன் கட்டளையை சிர மேற்கொண்டு செயல் படுவார்கள்’ என்றான்.

ராமன் அனுமனை அழைத்து ‘ வாயு..மைந்தா உன்னால்தான் இந்த வேலை நடைபெறவேண்டும்.வீரம்,புத்திஉபாயம்.அறிவு அனைத்தும் உன்னிடம் உள்ளன.சீதையை தேடி கண்டுபிடிப்பது உனது வேலை என்றான்.

18.வாலி வதம்




ராமன் சுக்ரீவனிடம் வாலியை சண்டைக்கு அழைக்குமாறும் அவனுடன் சண்டை செய்துகொண்டு இருக்கும்போது மறைந்து நின்று தாக்குவதாகவும் கூறினார்.

சுக்ரீவன் உடனே வாலியை போருக்கு அழைத்தான்.

வாலியும் பாய்ந்து வந்தான்.

கடும் போர் நிகழ்ந்தது.முடிவில் சுக்ரீவனை வாலி அடித்து வீழ்த்தினான். சுக்ரீவன் அடிபட்டு,வேதனைப்பட்டு ரிஷிமுக பர்வதம் ஓடி வந்தான்.

ராமா’ இப்படி நம்பிக்கை துரோகம் பண்ணலாமா? ‘ உன் வீரத்தைக் கண்டு மெச்சினேன்’. இதுவா உன் வீரம்’ எப்படி அடிபட்டு வந்துள்ளேன் என அழுது புலம்பினான்.

ராமன்’..சுக்ரீவா..கவலைப்படாதே..நீயும் உன் சகோதரன் வாலியும் ஒரே மாதிரி இருந்ததால் தான் இந்த குழப்பம்.யார் நீ? யார் வாலி என்ற அறிய முடியவில்லை. நீ இந்த  மாலையை அணிந்துகொண்டு வாலியுடன் யுத்தம் செய்..இன்று வாலி தொலைந்தான்..கவலைப்படாதே என தேற்றினார்..சுக்ரீவன் ராமன் பேச்சைக்கேட்டு தன்னை ஒருவாறு தேற்றிக்கொண்டான்.

மறுநாள் ராமன் அணிவித்த மாலையை ‘ வெற்றி மாலையாக’ அணிந்துகொண்டு வாலியை யுத்தத்திற்கு அழைத்தான்.வாலியும் வந்திருப்பது தன் தம்பி தான் ஆயினும் இவ்வளவு அடிபட்டும் இன்று என்னுடன் போருக்கு வந்துள்ளானே..என்று ஆச்சிரியப்பட்டான்.

தாரை..வாலியைப்பார்த்து போருக்கு செல்லவேண்டாம்.ஏதோ ஒரு பலம் பின்னால் இருக்கிறது.இல்லாவிடில் நம்முடன்  மீண்டும் சண்டையிட வருவானா? எனவே இம்முறை நமக்கு ஆபத்து  நிச்சயம் போர் வேண்டாம் என தாரை தடுத்தாலும்,

வாலியோ யாராக இருந்தாலும் என் முன் நிற்க யாருக்கும் துணிச்சல் கிடையாது.ஒரு கை பார்க்கிறேன் என்று கூறி சுக்ரீவனுடன் போருக்கு புறப்பட்டான்

சுக்ரீவனும் வாலியும் கடுமையாக மோதிக்கொண்டனர்.இனி ஒரு கணம் தாமதித்தாலும் சுக்ரீவனைவாலி கொன்றுவிடுவான் என ராமன் எண்ணினான்.மரத்தின் மறைவில் நின்று கொண்டு ராமன்  வாலியின் மீது  பாணம் தொடுத்தார் . வாலி தன் மீது யார் பாணம் தொடுத்தார் என சுற்றும் முற்றும் பார்த்தான்.

ராமன் அவன் அருகே வந்தான்…..வாலி ராமரிடம்….’தசரதா…இது உனக்கு அடுக்குமா..நீ இப்படி மறைந்து நின்று பாணம் விட்டது வீரனுக்கு அழகா? என்றவாறு ராமனை இகழ்ந்தான்.


25. கண்டேன் சீதையை




 வானரத்துக்கு வால் தான் அழகு.வாலில் பழந்துணிகளைக் சுற்றி எண்ணெயில் தோய்த்து கொளுத்தி விட்டு…அனுமனைக் கட்டி வீதியெங்கும் அழைத்து சென்றார்கள்.இதை அறிந்த சீதை “ஏ” அக்னியே…அனுமனுக்கு துன்பம் நேராமல் காப்பாயாக’ என வேண்டினாள்.

சீதையின் வேண்டுகோளின் படி அக்னிதேவன் அனுமனை  ஒன்றும் செய்யவில்லை.எரியும் வாலுடன் அனுமன் திடீரென பேருரு கொள்ள எழுந்தான்.அனுமனின் கட்டுகள் விலகின.அரக்கர்கள் ஓடி ஒளிந்தனர்.அனுமன் ஒவ்வொரு மாளிகையாக தாவித்தாவி சென்றான்.காற்று வீசியது.நகரெங்கும் தீப்பிடித்து எரிந்தது.இலங்கை நகரமே தீக்கிரையாயிற்று.. 

திரிகூட மலை மீது ஏறி நின்று அனுமன் இலங்கை தகனத்தைக் கண்டு மகிழ்ந்தான்,கடலில் மூழ்கி வாலில் இருந்த நெருப்பை அணைத்துக்கொண்டான்.

அங்கிருந்து மீண்டும் தாவி வானரவீரர்கள் இருக்கும் இடத்தை அடைந்தான்.வானர வீரர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.தான் சென்று வ்ந்த செய்தியை எல்லாம் அவர்களுக்கு கூறினான்.

பின் ராமனை சந்தித்த அனுமன் ‘கண்டேன் சீதையை’ என்றான்.அனுமன் சீதையின் நிலையை ராமனுக்கு கூறினான்.தான் சென்று வந்த வரலாற்றைக் கூறினான்.இலங்கை பற்றியும் ராவணன் பற்றியும் கூறினான்.இன்னும் ஒரு மாத காலத்திற்குள் தன்னை சீதை அழைத்துக்கொள்ள சொன்னதை கூறினான். சூடாமணியைக்  கொடுத்தான்.ராமன் அதை கண்களில் ஒற்றிக்கொண்டு சீதையை பார்த்தது போல் மகிழ்ந்தான்.

(சுந்தர காண்டம் முற்றிற்று.) 


24.ராம தூதன் நான்




 இந்திரஜித் பெரும் படையுடன் அனுமனை பிடிக்க வந்தான்.இந்திரஜித் அனுமனுடன் பெரும் போர் புரிந்தான்.இருவரும் சமபலம் பொருந்தியவர்கள்.அதனால் வெற்றி-தோல்வி மாறி மாறி இருந்தது.இந்திரஜித் பிரமாஸ்திரத்தை அனுமன்  மேல் ஏவினான்.பிரமாஸ்திரத்திற்கு அனுமன் ஒரு நாழிகை கட்டப்பட வேண்டும் என்பது விதி.அதற்கு மேல் பிரம்மாஸ்திரம் அனுமனை ஒன்றும் செய்யாது என்று அவன் பெற்ற வரமாகும்.அனுமன் ராவணனைக்கண்டு உபதேசம் செய்ய எண்ணினான். எனவே பிரமாஸ்திரத்திற்கு கட்டுபட்டு இந்திரஜித்துடன் ராவணனின் அரண்மணைக்கு சென்றான்.

ராவணன் கம்பீரமாய் உட்கார்ந்திருந்தான்.குரங்கே நீ யார்….உண்மையைச் சொல் என்றான்.அனுமன் ராவணனை நோக்கி ‘ நான் ராமதூதன்’சுக்ரீவனின் அமைச்சன்.சீதையைக் காணவந்தேன்,இப்போது சீதையைக்  கண்டேன்.

சீதையை நீஅபகரித்து வந்தது தவறு.இதனால் உன் குலம் அழிவதற்கு காரணமாகும்..நீ அழிந்து போகவேண்டாம்.உன் நன்மைக்காகவே சொல்கிறேன்.ராமனிடம் சரண் அடைவதே நல்லது என தைரியத்துடனும் விளக்கமாகவும் கூறினான்.

இது கேட்ட ராவணன் கடுங்கோபம் கொண்டு ‘ இந்த குரங்கை கொல்லுங்கள்’ என உத்தரவிட்டான்.ராவணனின் தம்பி விபீஷணன் தூதனாக வந்தவனை கொல்லக்கூடாது.ஏதாவது அங்கஹீனம் செய்து அனுப்பலாம் என்று அறிவுரை கூறினான்.


Thursday 22 December 2022

23. இந்திரஜித்

 



ராமன்,லட்சுமணன் பெயரைக்கேட்டு சீதை மகிழ்ந்தாள்.துன்பம் நீங்கிட வழி கிடைத்ததே என்ற ஆவலில் ராமனை பிரிந்து இவ்வாறு வாடுகிறேன் என்று கூறினாள்.

தாயே,உங்களைப் பிரிந்து ராமன் மிகவும் துன்பத்தில் உள்ளார். விரைவில் அவர் தங்களை மீட்க வருவார்’ என்ற அனுமன் தன்னைப்போல வானர சேனைகள் பல ஆயிரம் உள்ளதாகவும்,இராமன் சேனைகளுடன் வந்து ராவணனை வதம் செய்து அவளை மீட்டுச் செல்வார்.அதுவரை பொறுமையாய் இருக்கும்படி கூறி ராமர் கொடுத்த கணையாழியை சீதையிடம் அனுமன்கொடுத்தார்.

கணையாழியைக் கண்டதும் ராமனையே கண்டது போல சீதை மகிழ்ந்தாள்.

‘இன்னும் நான் நாள் காத்திருக்கமுடியாது.உடனே என் உயிரை காப்பாற்றும்படி கூறு.இந்த சூடாமணியை ராமனுக்கு அடையாளமாகக் கொடு என்று தன் உடை தலைப்பில் முடிந்து வைத்திருந்த அந்த ஆபரணத்தை அனுமனிடம் கொடுத்தாள்.அனுமன் சீதைக்கு ஆறுதல் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டான்.

சீதையின் நிலையைக் கண்ட அனுமனுக்கு ஆத்திரம் அதிகமாயிற்று..தன்னால் இயன்றவரை அவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணினான். மரங்களை ஒடித்து  அசோகவனத்தை அழித்தான்.

இதனை அறிந்த ராவணன் அனுமனை பிடிக்க உத்தரவிட்டான்.வீரர்களுக்கும் அனுமனுக்கும் கடும்போர் நிகழ்ந்தது.போரில் பலர் மாண்டனர்.ராவணனின் பராக்கிரமசாலியான  ஜம்பு மாலினி என்ற அரக்கனை போருக்கு அனுப்பினான்.

ஜம்புமாலினி அனுமனிடம் அதிகம் போர் புரியவில்லை.உடனே வீழ்ந்து உயிர் விட்டான்.ஜம்புமாலினி இறந்ததைக் கேட்டு அவரது மகன் அட்சயன் வந்தான்,அவனது தேர்  சக்தி வாய்ந்தது.வானத்தில் யுத்தம் நடந்தது.அனுமன் அட்சயனுடைய குதிரையையும்..அவனையும் கொன்றான்.இதைக்கேட்டு ராவணன் அதிச்சி அடைந்தான்

தன் மகன் இந்திரஜித்திடம்,அட்சயன் கொல்லப்பட்டதையும், வந்திருக்கும் குரங்கு சாமான்ய குரங்கு அல்ல,வலிமையுள்ளது என்றும் அதனை இந்திரனையே வென்ற உன்னால் தான்வெல்லமுடியும் என்றும் கூறி..அதை கட்டி இழுத்துவா என்றான்.

Wednesday 21 December 2022

அயோத்தியா காண்டம் -5.தசரதன் அளித்த வரம்



தசரத சக்கரவர்த்திக்கு வயதாகிவிட்டது என்பதை உணர்ந்தார்.அதனால் அன்பு மகன் ராமனுக்கு முடி சூட நினைத்தார்.கேகய நாட்டிலிருந்து பரதனை வரவழைக்ககூட அவகாசமில்லாது …ராமனுக்கு முடிசூட நாள் குறிக்கப்பட்டது.

நாடே… ராம பட்டாபிஷேகத்தைக் கொண்டாட தயாரானது.அதேசமயம், சூழ்ச்சி ஒன்றும் உருவானது.அரண்மனையில் மந்திரை என்ற கூனி இருந்தாள்.கைகேய சக்கரவர்த்தினிக்கு அவள் பணிப்பெண் ஆவாள்.கைகேயின் திருமணத்திற்கு பின் கைகேயிக்கு பணியாற்ற வந்தாள்.கூனி கைகேயியைப் பார்த்து “ நாளை ராமன் பட்டாபிஷேகம்.உனக்குத் தெரியுமா?” என்று கேட்டாள்.

கைகேயி “அப்படியா,நல்ல செய்தி” என முத்துமாலை ஒன்றை பரிசளித்தாள்.உடனே கூனி அந்த முத்துமாலையை  வீசி எறிந்தாள்.

கைகேயி…”உனக்கு என்ன பைத்தியமா? உன் மகன் பரதன் அரசாளாது ராமன் அரசாண்டால் உன் வம்சம் எப்போது  முன்னுக்கு வரும்.கோசலையை எல்லோரும் பாராட்டுவார்கள்.உன் நிலை என்ன? பரதன் இல்லாதபோது நடக்கும் இந்த பட்டாபிஷேகம் ஒரு சூழ்ச்சி போலத் தெரிகிறது.” என அவள் மனதில் நஞ்சினைக் கலந்தாள்.

இப்போது கைகேயி பரதன் நாடாள ஆசைப்பட்டாள்.

முன்னர் ஒரு சமயம் சம்ராசுரன் யுத்தத்தில் தசரதன் கைகேயிக்கு இரண்டு வரங்கள் அளித்தார்.அவற்றை எப்போது வேண்டுமோ அப்போது பெற்றுக்கொள்வதாகக் கூறி இருந்தாள்.

இப்போது அந்த வரத்தை கேட்டுப் பெற முற்பட்டாள்.

ஒரு வரத்தின் படி  பரதன் நாடாளவும்,மற்ற வரத்தின்படி ராமன் 14 ஆண்டுகள் வனவாசம் மேற்கொள்ளவும்,தசரதனிடம் கேட்டாள்.

தசரதன் தன் மேல் இடி விழுந்ததைப்போல உணர்ந்தான்.

கைகேயியைப் பார்த்து கெஞ்சினான்.”பரதன் வேண்டுமானால் அரசாளட்டும்,ராமனை காட்டிற்கு அனுப்பவேண்டாம் என்று கேட்டார்.

கைகேயி..ஒரே பிடிவாதமாய் தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றியே ஆகவேண்டும் என்று கேட்க தசரதன் அப்போதே ராமனைக் காணவேண்டும்.உடனே அழைத்து வா” என்று கூறி மூர்ச்சித்து விழுந்தார்.






Monday 19 December 2022

20.- அனுமன் விஸ்வரூபம்




 ராமன் அனுமனிடம் தன் மோதிரத்தை கொடுத்து இதனை அடையாளப் பொருளாக வைத்துக்கொள்.இதனை சீதையிடம் கொடுத்தால்…உன்னை எனது தூதன் என  நம்புவாள். என்று சொல்லிவிட்டு சீதையை பற்றி சில அடையாளங்களும் கூறி தென் திசை நோக்கி செல்லுமாறும்,இலங்கை அந்த திசையில் தான் இருக்கிறது என்றும் கூறினார்.சுக்ரீவன் தென் திசையில் செல்லும் வழிகளையும் அத்திசையில் காணக்கூடிய மலைகளையும்,அருவிகளையும்,ஆறுகளையும் விளக்கினான்.

அனுமன்,அங்கதன் படைகள்தெற்கு நோக்கி சீதயைத்தேடி போனார்கள்.

வடக்கு,மேற்கு,கிழக்கு திசைகளில் சென்ற படைவீரர்கள் சீதை கிடைக்காமல் ஒரு மாதம் கழித்து வந்து சேர்ந்தனர்.

அனுமனும்,அங்கதனும் ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக் கொண்டே தெற்கு நோக்கி சென்று கொண்டே கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர்.அங்கு சம்பாதி என்ற கழுகு அரசன் இருந்தான்.மிகவும் வயதானவன்.ஆனால் கண்பார்வை கூரியதாக இருந்தது.

இவர்கள் சீதையை பற்றியும்,தனது தம்பி ஜடாயு பற்றியும் கூறிக்கொண்டிருந்ததைக் கேட்டு அவர்களைப் பற்றி அறிந்து கொண்டது சம்பாதி தன் தம்பி ஜடாயு இறந்ததை கேள்விபட்டு மிகவும் வருந்தியது மேலும் தன் கூரிய பார்வையால்.

சீதை இலங்கையில் இருப்பதையும் சீதை சிறைவைக்கப்பட்டு இருப்பதையும் கூறியது.இலங்கை செல்லுமாறு கேட்டுக்கொண்டது.ஆனால் கடலைத் தாண்டி சென்றால்தானே இலங்கையை அடையமுடியும்.

‘நீங்கள் ஒவ்வொருவரும் எவ்வளவு தூரம் தாண்டமுடியும்’ என வானரங்களைக் கேட்டான் அங்கதன்.

ஒவ்வொருவரும் தன்னால் முடிந்த அளவு சொன்னார்கள்.ஆனால் அனுமன் ஒன்றும் கூறவில்லை.ஆனால் அனைவரும் அனுமனால்தான் இக்காரியம் நடைபெறமுடியும் என்றும்,திரிவிக்ரமனைப்போல விஸ்வரூபம் எடுக்க முடியும் என்றனர்.ஒரே தாவலில் இலங்கை செல்லலாம் என வானரப்படையின் தலைவர் ஜாம்பவான் கூறினார்.

உடனே…மகிழ்ச்சியுடன் அனுமன். மிக உயர்ந்த வடிவம் எடுத்தான்.எல்லோரும் அவனது அடிமுடி காணாமல் திகைத்தனர்.

அனுமன்,’நீங்கள் கவலையின்றி இங்கேயே இருங்கள்…விரைவில் திரும்பி வருவேன்…என்று கூறி ஒரே தாவலில் இலங்கை சென்றான்.

(கிஷ்கிந்தா காண்டம் முற்றும்)

Thursday 15 December 2022

17. ராமரின் பலம்


 


அனுமன் ராமரையும் லட்சுமணனையும் சுக்ரீவனிடம் அழைத்து வந்தான். அவர்களை சுக்ரீவனுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.

ராமன் சுக்ரீவனை தன் உடன்பிறந்தவராக எண்ணுவதாக கூறினான்.’ இனி எனது சுகதுக்கங்கள் உனது சுகதுக்கங்கள்’என இருவரும் நட்பு கொண்டனர்.

அனுமன் தீ மூட்ட …அக்னியின் முன் தீயை வலம் வந்து தங்கள் நட்பு  நிலைபெற்று இருக்குமென இருவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

சுக்ரீவன் ராமனிடம் தான் வாலிக்கு பயந்து ரிஷிமுக பர்வதத்தில் தங்கி இருப்பதாகக் கூறி…வாலியை வதம் செய்து தன் அரசாட்சியையும்,தன் மனைவியையும் மீட்டுத் தருமாறு கேட்டுக்கொண்டான்.ராமரும் அவ்வாறே செய்வதாக வாக்களித்தார்.

அப்போது சில வானரங்கள் ஒரு துணிமூட்டையை சுக்ரீவனிடம் கொண்டுவந்து கொடுத்தன.மேலும் ஒரு பெண்ணை அரக்கன் ஒருவன் துரத்தி செல்லும்போது, அப்பெண் இம்மூட்டையை   கீழே வீசி எறிந்ததாகக் கூறினர்.

சுக்ரீவன் அந்த துணி மூட்டையில் ஆபரணங்கள் இருப்பதை பார்த்தான். ராமர்  அவற்றைப் பார்த்து அவை சீதையுடையது தான் என்றார்.மேலும் ‘சீதையை கவர்ந்து சென்றவனை குலத்தோடு அழிப்பேன்’ என்று சபதம் செய்தார்.

வாலியும் சுக்ரீவனும் சகோதரர்கள்.இருவருக்கும் ஒர் அரக்கன் காரணமாக பகை உண்டாயிற்று. வாலியை யாராலும் அழிக்கமுடியாது.வாலியை எதிப்பவர் யாராக இருப்பினும் அவர் பலத்தில் பாதியை இழந்து விடுவர்.எனவே வாலி எதிர்ப்பவர் இல்லாமல் பலசாலியாக இருந்து வந்தான். சுக்ரீவன் வாலியை எதிர்க்க முடியாமல் மறைந்து வாழ்ந்தான். சுக்ரீவனுக்கு இராமன் வாலியை எதிர்த்து போரிடும் வலிமை உடையவரா இல்லையா என்ற ஐயம் ஏற்பட்டது.

அவன் ராமரின் பலத்தை அறிய விரும்பினான்.ராமர் ஒரே அம்பில் 7 மரா மரங்களை துளைத்தார்.மேலும் அவை ஒன்றுக்கொன்று நேராக இல்லை.ஆகவே அதனை துளைத்ததால் சுக்ரீவன் மிகுந்த சந்தோஷப்பட்டான்.இனி நம் எதிரி அழிந்தான் என்று கூக்குரலிட்டான்.


Wednesday 14 December 2022

கிஷ்கிந்தா காண்டம்


 


16. அனுமன் சந்திப்பு

பம்பை நதிக்கரை ரம்யமாக இருந்தது.ஆறு,குளம்,காடு,மிருகங்கள்,பறவைகள் ஆகியவற்றைக் கண்டபோது ராமனுக்கு சீதை தன் அருகில் இல்லையே என்ற எண்ணம் ஏற்பட்டது.

ராமரும் லட்சுமணனும் வில் பிடித்து இங்கும் அங்கும் உலாவுவதை சுக்ரீவன் கண்டான்.

தன் தமையன் வாலிக்கு பயந்து ரிஷிமுக பர்வதத்தில் வாழ்ந்துவந்த சுக்ரீவனுக்கு வாலி தான் மாறுவேடம் பூண்டு வந்துவிட்டானோ என்ற பயம் ஏற்பட்டது.

அனுமன் சுக்ரீவனின் அமைச்சன் ஆவான்.வந்திருப்பவர்கள் வாலியின் ஆட்களோ….அல்லது வாலியோ அல்ல.நான் நேரில் சென்று  யார்? என விசாரித்து வருகிறேன் …என்று கூறினான்.

பின் அழகிய மானிட வடிவம் கொண்டு ராம,லட்சுமணர்கள் முன்னால் வந்து நின்று..’ நீங்கள் தவ முனிவர்கள் போல இருக்கிறீர்கள்.ஆனால் உங்கள் கைகளில் வில்லும் அம்பும் வைத்துள்ளீர்கள்.நீங்கள் தேவர்களா அல்லது அசுரர்களா என அறிய  வந்திருக்கிறேன்.நான் இப்பகுதியை ஆண்டுவரும் சுக்ரீவன் என்ற வானர அசுரனின் மந்திரி.என் பெயர் ‘அனுமன்’ என்றான்.

அனுமன் சொன்னதைக் கேட்ட லட்சுமணன் அனுமன் சிறந்த. அறிவாளியாக இருக்கிறான்.ஒரு வேளை அவன் சிவபெருமானோ அல்லது பிரம்மனோ என்று நினைத்தான்.

ராமன் தன் தம்பி லட்சுமணனிடம் நாம் யாரைத்தேடி வந்தோமோ அவனே நம்மை தேடி வந்துள்ளான் என்றான்.

ராமரும் லட்சுமணனும் சீதையை ராவணன் தூக்கிச் சென்றதையும்,சீதையைத் தேடி வந்ததையும் கூறினார்.அனுமன் சுக்ரீவன், வாலிக்கு பயந்து ரிஷிமுக பர்வதத்தில் உள்ளதாகவும்,ரிஷிமுக பர்வதத்தில் வாலி நுழையமுடியாமல் சாபம் உள்ளதையும்,சுக்ரீவனுக்கு வாலி கொடுமை  செய்துள்ளான் என்பதையும் எடுத்துக் கூறி சுக்ரீவனின் நட்பை பெற்று சீதையை தேடி அடையுமாறு யோசனை கூறினான்.

15. ஜடாயு,கபந்தன் தகனம்

 



சீதையைத் தேடி ராமனும்,லட்சுமணனுன் சென்றனர்.அவ்வாறு செல்லும் வழியில் ஜடாயு இரத்த வெள்ளத்தில் கிடந்தது.

ஜடாயு சீதையை ராவணன் தென்திசை நோக்கி எடுத்து சென்றதையும் அவனுடன் போர் செய்து தான் இவ்வாறு கிடப்பதையும் கூறி உயிர் விட்டது.

ஜடாயுவுக்கு செய்ய வேண்டிய காரியங்களை ராமன் செய்தார்.ஜடாயு மூலம் சீதையை பற்றிய தகவல்கிடைத்தது பற்றி தைரியம் அடைந்தனர்.

ஒருத்தருக்கொருத்தர்  ஆறுதல் கூறிக்கொண்டு செல்கையில் ஒரு கோர உருவம் அவர்களைப் பற்றிக்கொண்டது.அவன் பெயர் கபந்தன்.அவனுக்கு தலையும் இல்லை,கால்களும் இல்லை.கைகளை எவ்வளவு தூரம் நீட்டமுடியுமோ…அவ்வளவு தூரம் நீட்டி கிடைத்த உணவை உண்பவன்.

ராமனும்,லட்சுமணனும் அரக்கர்களின் இரண்டு கைகளும் வெட்டப்பட்டவுடன் அரக்கன் நீங்கள் இருவரும் தசரத குமாரர்கள் என அறிவேன்.உங்களால்தான் எனக்கு சாபவிமோசனம் கிடைக்க உள்ளது.எனவே என் உடலை  எரியுங்கள் என்றான். அவ்வாறு அவனது உடலை எரிக்க அவன் அழகிய உடலை பெற்றான்.சுவர்க்கம் சென்றான். 

பம்பா நதிக்கரையில் சுக்ரீவன் என்ற வானரத்தலைவன் இருக்கிறான்.அவனது நட்பை பெறுங்கள்.உங்கள் காரியம் கைகூடும் என்று கூறி சுவர்க்கம் சென்றான்.

ஆரண்ய காண்டம் முற்றும்.

Tuesday 13 December 2022

14.சீதை கடத்தப்பட்டாள்


 


லட்சுமணன் பர்ணசாலையை விட்டு அகன்றதும் ராவணன் சந்நியாசி உருவம் தாங்கி பர்ணசாலைக்கு வந்தான்.சீதையிடம் பிட்சை கேட்டான்.

லட்சுமணன் போட்ட கோட்டை தாண்ட ராவணனால் முடியவில்லை.சீதையை குடிலுக்கு வெளியே வந்து பிட்சை இடுமாறு கேட்டான்.

சீதையும் லட்சுமணன் போட்ட கோட்டை தாண்டி வந்தாள்.உடனே ராவணன் பர்ணசாலையுடன் பெயர்த்து  சீதையை தூக்கி சென்றான்.

ராவணன் சீதையை இலங்கை நகருக்கு தூக்கி சென்றான்.வழியில் சீதை ‘ என்னை காப்பாற்றுங்கள்’ என கூவிக்கொண்டே சென்றாள்..வழியில் அவள் தன் நகைகளை கழற்றி ஒரு முடிச்சாக கட்டி அதனை கீழே எறிந்தாள்.இது தன்னை தேடி வரும் சமயம் ராமனுக்கு வழியறிய உதவும்  என எண்ணினாள். 

மாரீசனை கொன்ற இடத்துக்கு லட்சுமணன் ஓடி வந்தான்.ராமன் ‘ தம்பி நான் நினைத்தவாறே நடந்துவிட்டது..நாம் சீதையை தனியாக விட்டுவிட்டு வந்தது தவறு,இதே நேரம் சீதைக்கு என்ன துன்பம் நேர்ந்ததோ என்று கூறிக்கொண்டே பர்ணசாலைக்கு விரைவாக  திரும்பினார்கள்.

அங்கே பர்ணசாலையைக் காணவில்லை.

Sunday 11 December 2022

13 - மாரீசன் எனும் மாயமான்


 


வேதனை அடைந்த சூர்ப்பனகை இலங்கை வேந்தன்  இராவணனிடம் சென்றாள்.அவளுக்கு ராமனை பழிவாங்கும் எண்ணமே இருந்தது.

இராவணனின் பாதங்களில் விழுந்தாள்.சீதையின் அழகைக்கூறி இராவணனிடம் சீதையின் மீதான ஆசையை உண்டாக்கினாள்.சீதையை உனக்காக எடுக்கப்போனபோது இவ்வாறு அவமானபட்டேன் என்றாள்.

சூர்ப்பனகை மூலம் சீதையின் அழகை கேள்விப்பட்ட இராவணன் அவளை தூக்கிவர திட்டமிட்டான்.

இதற்காக மாரீசனிடம் மாயமானாக மாறி ராமனையும்,லட்சுமணனையும்   தனியே பிரித்து வைக்குமாறு கேட்டான்.

இதற்காக மாரீசன் புள்ளிமான் வடிவம் கொண்டான்.மானின் ஒவ்வொரு புள்ளியும் தங்கம் போல தகதக என மின்னியது.

சீதை மானைப்பார்த்ததும்’எனக்கு இந்த அழகிய மானை பிடித்துக் கொடுங்கள்’ . நான் இதனை ஆசிரமத்தில் கட்டி வளர்க்கிறேன்’ என்றாள்.

மாயமானை பிடிக்க ராமன் சென்றபோது,மாயமான் அவரது பிடிக்கு சிக்காமல் ராமனை நெடுந்தொலைவு அழைத்து சென்றது.ராமன் அந்த மானைக் கொல்ல அம்பு எய்தினான்,மாயமானோ..லட்சுமணா…சீதே…என பலமாக ராமனின் குரலில் கூவி உயிரைவிட்டது.

சீதை ராமருக்கு ஏதோ ஆபத்து வந்துவிட்டது என்று எண்ணினாள்.

‘’லட்சுமணா…ராமனுக்கு ஆபத்து நேர்ந்துவிட்டது.உடனே போய் பார்’ என்றாள்.

லட்சுமணன் சீதையை ஆறுதல் படுத்தினான்.’ராமருக்கு ஒரு ஆபத்தும் வராது….கவலைப்படாதீர்கள் என்றான்.

சீதை லட்சுமணனைப் பார்த்து பல தகாத வார்த்தைகள்  கூறினாள்.

லட்சுமணன் பர்ணசாலையை  சுற்றி அம்பினால் கோடு போட்டான்.எக்காரணம் கொண்டும் இக்கோட்டை தாண்டீ வராதீர்கள் என எச்சரித்துவிட்டு ராமனைத்தேடி சென்றான்.


Friday 9 December 2022

12.சூர்ப்பனகை


 


ராமன்  அகஸ்தியரின் ஆசிரமத்துக்கு சென்றான்.முனிவரின் காலில் விழுந்து அனைவரும் ஆசிபெற்றனர்.

அகத்தியர் ஆசிரமவாசிகளுக்கு அவர்களை அறிமுகப்படுத்தினார்.அகஸ்தியர் மூலமாக பெரிய அரிய சாஸ்திர வித்தைகளை ராமர் அறிந்தார்.

தெய்வீக ஆயுதங்களை ராமனுக்கு உரியவன ஆக்கினார். ராமன் பஞ்சவடியில் சென்று ஆசிரமம் நடத்த ஆணை இட்டார்.

பஞ்சவடி என்பது கோதாவரி நதிக்கரையில் இருந்தது.அகஸ்தியரிடம் இருந்து அவர்கள் விடைபெற்றனர்.

பஞ்சவடி  நோக்கிச் செல்லும் போது ஒரு பெரிய கழுகை கண்டனர்.அது கருட பகவான் தம்பியான அருணனுடைய மகன் ஜடாயு என அறிந்தனர்.

ராமர்,சீதை லட்சுமணர்களை தசரதர் மக்கள் என்று அறிந்ததும் ஜடாயு இறங்கி வந்து அவர்களைத் தழுவிக்கொண்டது.

பஞ்சவடியில் லட்சுமணன் பர்ணசாலை அமைத்தான்.அங்கு சில நாட்கள் அமைதியாக கழிந்தது.

ஒரு நாள் அங்கு சூர்ர்ப்பனகை எனும் அரக்கி வந்தாள். அவள் நினைத்த வடிவம் கொள்ள வல்லவள்.இவள் இராவணன் கும்பகர்ணன்,விபீஷணன் தங்கை ஆவாள்.

ராமனின் அழகில்  மயங்கி, ராமனை தன்னை திருமணம் செய்து கொள்ளச்  சொன்னாள்.

ராமனும்,தான் தன் மனைவியுடன் இருப்பதாகவும்,தன் தம்பி லட்சுமணன் திருமணம் ஆனவன் ஆனாலும் அவன் மனைவி இங்கு இல்லை.அவனை சென்று பார்க்கும்படியும் கூறினான்.

லட்சுமணன் சூர்ப்பனைக்கு சரியான  பாடம் கற்பிப்பான் என ராமன் அறிவான்.

சூர்ப்பனகை லட்சுமணனிடம் சென்றாள்.தன்னுடன் இன்பமாக இருக்கக்கேட்டாள்.

லட்சுமணன் கோபத்தால் அவளது மூக்கையும் காதையும் அறுத்துவிட்டான்.

சூர்ப்பனகை அழுதபடியே தன் சகோதரர்களிடம் சென்று நடந்ததை கூறினாள்.

தன் தங்கைக்காக கரன்,தூஷணன்,திரிகரன் மூவரையும் ராமரை எதிர்க்க அனுப்பினார்கள்.

ராமர் லட்சுமணனை சீதையின் பாதுகப்பில் விட்டுவிட்டு அவர்களிடம் போரிட்டு அவர்களை அழித்தான்.


Wednesday 7 December 2022

ஆரண்ய காண்டம்


 


11.தண்ட காரண்யம்

——————————-

ராமனுக்கு பரத,சத்துருக்கனும்,வசிஷ்டரும் வந்தது வேதனையாக இருந்தது.மேலும் சித்ரகூடத்தில் இருப்பது தன் தவ வாழ்க்கைக்கு ஏற்றதல்ல….இனி அயோத்தியிலிருந்து யாராவது வந்து கொண்டிருப்பார்கள் என ராமன் தண்டகாரண்யம் செல்ல முடிவெடுத்தான்.தண்டகாரண்யத்தில் ரிஷிகள் பலர் இருப்பதால் தவ வாழ்க்கைக்கு அதுவே சிறந்த இடம் எனக் கருதினார்.

தண்டகாரண்யத்தில் முதன் முதலாக் அத்ரி முனிவர் ஆசிரமம் சென்றனர்.அத்ரி முனிவரின் பத்னி அனுசுயா ஆவாள்.அத்ரி முனிவரும் அனுசுயா தேவியும் தனது குழந்தைகளைப்போல ராம,லட்சுமணன்,சீதை ஆகியோரை கவனித்துக்கொண்டனர்.ராமனின் தவத்துக்கு இடயூறு விளைவிக்கும் விலங்குகளை கொன்றனர்.

ராம,லட்சுமணன் சீதையுடன் கானகம் செல்லும்போது விராதன் என்ற ராட்சசன் வந்தான்.

அவன் ராமனையும்,சீதையையும் கொன்றுவிட்டு…சீதையை தன் மனைவியாக ஆக்கிக்கொள்வேன் என்று கூறி அவர்களுடன் சண்டையிட்டான்.யுத்தம் உக்ரமாக நடந்தது.ராட்சசன் இறக்கவில்லை.உடனே அவர்கள் ஆழமான குழி ஒன்றினை வெட்டி அவனை அதில் புதைத்தனர்.அக்கணமே சாபத்திலிருந்து விடுபட்டு அரக்கன் கந்தர்வன் ஆனான்.கந்தர்வன் அவர்களை சரபங்க முனிவரின் ஆசிரமம் செல்லுமாறு கேட்டுக்கொண்டான்.

அவன் கேட்டுக்கொண்டபடி அவர்கள் சரபங்க ஆசிரமம் சென்றனர்.சரபங்கனின் ஆயுள் முடியும் நேரம் வந்தது.சரபங்கன் ராமன்,லட்சுமணன்,சீதை மூவரையும் கண்டதும் அவர்களிடம்..’ராமா..மண்ணுலகில் நீ ஆற்ற வேண்டிய பணிகள் உள்ளன.நீ சுதீஷண மகரிஷியின் ஆசிரமம் செல்’ என்று சொல்லி தன் உடலை வேள்வி தீக்கு இரையாக்கினார்.

பின் அவர்கள் சுதீஷண முனிவரின் ஆசிரமம் சென்றனர்.ராமர் அங்குள்ள சில ஆசிரமங்களுக்கு சென்றார்.எங்கெங்கு எத்தனை நாட்கள் இருக்க வேண்டும்  என முறைவைத்துக்கொண்டு சென்றார்.அங்கு ரிஷிபங்க முனிவரை தரிசித்தார்.

ரிஷிகளுடன்,ராமன் தண்டகாரண்யத்தில் பத்து ஆண்டுகள் கழித்தார்.பத்து ஆண்டுகளும்,சிறப்பாகவும்,விரைவாகவும் சென்றதை உணர்ந்தார்.

Tuesday 6 December 2022

10. பாதுகா பட்டாபிஷேகம்




லட்சுமணன்  ராமனிடம் பரதன் படையெடுத்து வருவதாகக் கூறியதும்…
ராமன்’ லட்சுமணா..அவசரப்படாதே…பரதன் இங்கேயே தங்கி எனக்கு. தொண்டு புரிய நினைத்தால்
அவனுக்கு பதிலாக நீ அயோத்தி சென்று அரசாள்வாயாக’ என்றார்.
பரதனும் சத்ருக்கனும் அங்கே வந்து ராமர் கால்களில் விழுந்து வணங்கினர்.தந்தை காலமானதையும் கூறினார்கள்.அனைவரும் தந்தைக்கு நேர்ந்த முடிவை எண்ணி வருந்தினர்.பின் சகோதரர்கள் நால்வரும் சீதையும் சேர்ந்து தசரதனுக்கு செய்யவேண்டிய சடங்குகளை முறையாகச்  செய்தனர்.

பரதன் ராமனை அயோத்திக்கு வந்து ஆட்சி செய்ய அழைத்தார்.
தந்தைக்கு அளித்த வாக்கை நான் மீறமாட்டேன்.14 ஆண்டுகள் முடிந்ததும் அங்கு வந்து ஆட்சி பொறுப்பை ஏற்கிறேன் என கண்டிப்புடன்  கூறினார் ராமன்.

வசிஷ்டர் பரதனை ராமனின் பிரதிநிதியாக ஆளும்படி கேட்டுக்கொண்டார்.

பரதன் சிம்மாசனத்தில் ராமனின் பாதுகைகளை வைத்து ராமனின் பிரதிநிதியாக அரசாள்வதாகக் கூறினான்.

அயோத்திக்கு அருகில் உள்ள நந்தி கிராமத்தில் தங்கி..தவம் புரியும் பாங்கில் தன்னால் இயன்ற அளவு அரசாட்சி செய்வதாக கூறினான்.
ராமன் பரதனைக் கட்டித் தழுவி தன் இரு பாதங்களையும், பாதுகையின் மேல் பதியவைத்து தம்பி பரதனிடம் அளித்தான்.
பரதன் ராமனின் பாதுகைகளை தன் தலையில் சுமந்து கொண்டு நந்தி கிராமத்திற்கு வந்தான்.பாதுகைக்கு பட்டாபிஷேகம் செய்வித்து ராமனின் பிரதிநிதியாக ராஜ்ய பரிபாலனத்தை மேற்கொண்டான்.

(அயோத்தியா காண்டம் முற்றிற்று )

Monday 5 December 2022

9.பரதன் சித்திரக்கூடம் செல்லுதல்

 



பரதன் தன் தாய் கைகேகியின் மீது அதிக சினம் அடைந்தான்.;பதவி மோகம் உனது அறிவைப்பாதித்து விட்டது.மூத்தவன் இருக்க இளையவன் நான் அரசாள்வதா..ராமன் உன்னை தன் தாயினும் அதிகமாக நேசித்தானே..அவனுக்கு இப்படி ஒரு துரோகம் செய்ய உனக்கு எப்படி மனசு வந்தது..உன்னை கொலை செய்வதே நன்று.ஆனால் … ராமன் அதை ஆமோதிக்க மாட்டான்.அவனை எண்ணி உன்னை கொல்லாமல் விடுகிறேன்’ என்றான்.

மேலும் ‘நான் இந்த ராஜ்ஜியத்தை ஆளுவேன் என நினைக்காதே.ராமனைத்தேடி இப்பபோதே கிளம்புகிறேன்.ராமன் இல்லாமல் அயோத்தியில் நுழையமாட்டேன்.இனி நானும் தவ வேடத்தில் தான் இருப்பேன்’என பரதன் பதில் கூறினான்.

பின் வசிஷ்டரை சந்தித்து தந்தைக்கு செய்யவேண்டிய இறுதி சடங்குகளுக்கான ஏற்பாட்டினை  செய்யச்சொன்னான்.

பின் மந்திரிகளையும் முதியோர்களையும் சந்தித்து ஆலோசனை செய்தான்.பர்தன் தான் பதவி ஏற்கவரும் முறையையும்..ராமனை மீண்டும் அழைத்து வந்து பட்டாபிஷேகம்  செய்விப்பதாகவும் கூறி படைகளுடன் ராமனை அழைத்து வரச்சென்றான்.

கங்கைகரையில் குகன் முதலில் பரதனையும் அவனது படையையும் கவனித்தான்.ராமனுக்கு துன்பம் இழைக்க வருவதாக எண்ணினான்.ஆனால்…அவன் மரவுரி தரித்து தவக்கோலத்தில் வந்ததால் அவனை வரவவேற்று உபசரித்து அவன் வந்த நோக்கம் அறிந்து உதவி செய்தான்..

தன் படைகளை சற்று தொலைவில் நிறுத்திவிட்டு, வசிஷ்டரும்,பரதனும் பரத்வாஜ் ஆசிரம்த்திற்கு சென்று பரத்வாஜரை சந்தித்தனர்.அவர்,அவர்களை வரவேற்று ராமன் இருக்குமிடம் தெரிவித்தார்.

பரதன்,வசிஷ்டர் மற்றும் படைகள் புடைசூழ சித்திரக்கூடம் சென்றான்.

லட்சுமணன்,ஒரு படை வருவதைக்கண்டான்.அது இளவல் பரதனின் படை என்பதை உணர்ந்தான்.

அவர்களுக்கு உபத்திரம் செய்ய வந்திருப்பான் என்று எண்ணி….அவனை ஒரு நொடியில் ஒழித்து விடுகிறேன் என கூறிக்கொண்டு ராமனிடம் சென்று பரதன் படையெடுத்து வருவதைக் கூறினான்.


Saturday 3 December 2022

8. தசரதர் மறைவு

 

சித்திரகூடத்தை நோக்கி மூவரும் செல்கையில் அடர்ந்த மரங்கள்,புதர்கள் நிறைந்த வழியாக செல்ல வேண்டியிருந்தது.
லட்சுமணன் நடந்து செல்ல பாதையை உருவாக்க …சீதை வழி நெடுக மரம்,செடி காடுகள்,விலங்குகள் பற்றியும்,பறவைகள் பற்றியும் ஆர்வத்துடன் வினாக்கள் எழுப்பிய வண்ணம் சென்றாள். கடைசியில்  அவர்கள் மந்தாகினி நதியை அடைந்தனர்.

பரத்வாஜர் கூறிய சித்ரகூடம் இது தான் என அறிந்து  லட்சுமணன் அங்கு அவர்கள் தங்க பர்ணசாலையை அமைத்தான்.
சித்ர கூடம் எழில் மிகுந்து அமைந்திருந்தது.
அயோத்தியில்,ராமன் திரும்பி வரக்கூடும் என எண்ணியிருந்த தசரதன், தேரோட்டி சுமந்திரன் ராமன் காட்டிற்கு சென்றுவிட்டதைக் கூற..மனம் வருந்தி தசரதர் உயிர் துறந்தார்.
தசரதர் மறைந்ததும், வசிஷ்டர்  அடுத்து செய்யவேண்டிய செயல்களில் ஈடுபட்டார்.தசரதர் உடலை பரதன் வரும்வரை பாதுகாக்க ஏற்பாடு செய்தார்..

பரதனை உடனே அழைத்து   வர பணியாட்களை  அனுப்பிவைத்தார்.அவர்களும் சென்று பரதனை விவரம் எதுவும் கூறாமல் அழைத்து வந்தனர்.ஆனால்,வழி நெடுக பரதன் துயரம் ஆழ்ந்த சகுனங்கள் தென்படுவதைக் கண்டான்.

பரதன் நேராக தந்தையைக் காணச் சென்றான்.
அங்கு கைகேயி ..தசரதர் காலமான விஷயத்தை சொன்னாள்.பரதன் அழுது புரண்டான். பின் தன் தாயிடம் தசரதன் இறக்கும் போது என்ன கூறினார் என்று கேட்க …அவளும் ‘ராமா’ என்று மட்டுமே கூறியதாகச் சொன்னாள்.

பின் ராமன் வனவாசம் சென்றுள்ளதாகவும்,பரதன் பட்டமேற்கவும் அவரிடம் தான் வரம் கேட்டதையும் கூறினாள்.
அதைக் கேட்டு பரதன் மிகவும் கோபமடைந்தான். 

Thursday 1 December 2022

7.குகனுடன் ஐவரானோம்..

 

மறுநாள் காலையில் கங்கை நதிக்கரை ஓரம் ராமன்.லட்சுமணன்,சீதை ஆகிய மூவரும் வந்து சேர்ந்தனர்.

சாரதி அவர்களை பிரிய மனமில்லாமல்  அழுதான்.அவனுக்கு ஆறுதல் கூறிய ராமன் ..தாங்கள் மூவரும் காடு நோக்கி செல்வதாக அரண்மனையில் இருப்பவர்களுக்கு தெரிவிக்கும்படி கூறினான். சாரதி சுமந்திரன்காலி  ரதத்தை அயோத்திக்கு ஓட்டி சென்றான்.

கங்கைக்கரையில்  படகுத் தலைவன்  குகன் அவர்களை வரவேற்றான்.அவர்கள் வனவாசத்தின் 14 ஆண்டுகளையும் தன்னுடன் கழிக்குமாறு வேண்டினான்.
ஆனால் அவ்வாறு செய்வது தான் எடுத்துள்ள விரதத்துக்கு சரியில்லை என ராமன் கூறினான்.
பின் படகுத் தலைவன் ராமனுக்கு அறுசுவை உணவு  வழங்கினான்.
அதையும் ராமன் ஏற்கவில்லை.வெறும் கனிகளையே உண்டான். குகனது நட்பை பாராட்டி அந்த இரவை அங்கு கழித்தனர்.
ராமன் குகனை தன் சகோதரனாக பாவித்து’குகனுடன்  ஐவரானோம்’ என்றான்.

காலையில் சீதா தேவி கங்கா தேவிக்கு பூஜை செய்தாள்.ராமர் வழிபாடுகளை முடித்துக்கொண்டு கங்கையின் தெற்கு கரைக்கு வந்தார்..தெற்கு கரைக்கு வந்தார். அங்கு மானிடர்கள் யாரும் இல்லை.அப்போதுதான் ஏகாந்தம் எவ்வளவு கொடுமையானது என்பதை மூவரும் உணர்ந்தனர்,


ஆங்காங்கு அம்ர்ந்துள்ள பெரியோர்களின் நட்பைப்பெற திட்டமிட்ட ராமன் பரத்வாஜ மகரிஷியை சந்திக்க அவரது ஆசிரமத்துக்கு சென்றார்.
பரத்வாஜர் ராமன்,லட்சுமணன்,சீதை மூவரும் மகாவிஷ்ணுவின அவதாரம் என்பதை உணர்ந்திருந்தார்.

மூவரும் தங்கள் ஆரண்யவாசத்தை எப்படி நடத்த வேண்டும் என பரதவாஜ்  மூலம் தெரிந்து கொண்டனர்.
பின்,அவர்கள் பரத்வாஜ் ஆசிரமத்திலிருந்து சித்ரகூடம் செல்ல முற்பட்டனர்

39. ராமர் பட்டாபிஷேகம்

  இந்நிலையில், பரதன் ராம்ர் 14 ஆண்டுகள் முடிந்தும் வராததால்,அக்னி வளர்த்து அதில் புக இருந்தான்.அப்போதுஅனுமன் வந்து தடுத்து நிறுத்தினான். ராம...